அவன் ஒரு எழுத்தாளன்...

By Admin - 09 May 2024 340 0

அவனுக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது... காரணம், அவன் ஒரு எழுத்தாளன்...அவன் எண்ணங்களுக்கு அவனே ராஜா, அதற்கு அவனே இறைவன்... அந்த இறைவனும் இறங்கி பூமிக்கு வந்தால், அவனுக்கும் எழுதி தருவான் ஒரு கவிதையும், கட்டுரையும். காற்று செல்ல முடியாத இடம் என்று ஏதாவது இந்த பூமியில் இருந்தால், அவன் செல்வான். அவனுக்கு மட்டுமே தெரியும், அதன் வழியும், இரகசியமும். மனிதர்கள் யாரும், பார்த்திடாத, போயிடாத இடங்களுக்கும் அவன் செல்வான். அவனது, கற்பனையில் தோன்றுகின்ற அந்த வடிவங்கள் மூலமாக அவர்களின் விழித்திரையில் சித்திரம் வரைவான். அவனுக்கு அவனே, மகுடம் சூடி கொண்டான். ஆஹா ! ஒரு எழுத்தாளன் பிறந்து விட்டான் என்று...வேறு ஒருவரும் அதை ஏற்கவில்லை, கேலியும் கூத்தும் ஒன்றாய் அழகிய அரங்கேற்றம் நடத்துகிறது அவன் வாழ்வில்..எதுவும் கற்பனையே..அதற்கு எல்லை இல்லை, வரைகோடும் இல்லை. நினைத்ததை நினைத்த மறுநொடியில் எழுதும் வல்லமை கொண்டான், அது இறைவன் சித்தம்.. இந்த சிருஷிட்டியில் அவன் அவனை அதற்காக அனுப்பிவைத்தான் என்றால் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. காரண காரியம் எதுவாயினும், அவன் இதை, இதற்கு தான் என்று எண்ணி, தனக்குள் ஒரு கோட்டை கட்டிக்கொண்டான்.. நிலைக்கும் என்று எதுவெல்லாம் நினைத்தானோ, அது அனைத்தும் நிலையானது யில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்தான்...


அவன், நினைத்தான் இந்த உலகில் அனைத்தும் தெரியும் என்று..என்ன ஆணவம் ? வெறும் ஒரு சில கவிதைகளும், கட்டுரைகளும், கதைகளும் பலரிடம் கவனிக்கப்பட்டதால் என்னவோ? நூற்று கணக்கில் எழுதி தள்ளியும், அதை பார்க்க ஆள் இல்லை...அழகிய கோவில் கட்டி என்ன பயன், கற்பகிரஹத்தில் இறைவன்  இல்லையே, அதையும் மீறி இருந்தால் கவனிப்பார் இல்லையே. யாரும் இல்லா, ஆலயத்திலே, வெறும் தீபம் ஏற்றி என்ன பயன் என்ற தத்துவம் நினைவுக்கு வந்தது..  இருந்தும் அவனுக்கு சிந்தனையில், தெரியாதது என்று உண்டோ?  இருக்கிறது, பிறகு இறைவனுக்கு என்ன வேலை. வாழத்தான் தெரியவில்லை, வாழ்வியல் நியதி புரியவில்லை., அதை ஏனோ இறைவன் இறப்பை போல ரகசியமாக ஒளித்து வைத்தான். பிறப்பை வெளிப்படையாக வைத்த இறைவன், இறக்கும் நேரத்தை இரகசியமாக வைத்தான். பிறப்பை தடுக்கலாம், ஆனால் இறப்பை தடுக்க முடியாது...அந்த ரகசியத்துக்குள் அவன் தன்னையும் ஒளித்து வைத்தான்..நாத்திகம் பேசினாலும், இதை அறிய, தடுக்க ஒரு சக்தியில்லை என்பதை நம்பினால், அவர்களும் ஆத்திகர்களே..மீதியெல்லாம் வேஷங்கள்... ஆஹா..சித்தாந்தம் வழிகிறது அவன் சிந்தனையில்...


செல்வங்கள், வந்து வந்து செல்வதால் என்னவோ, அதற்கு செல்வம் என்று சொன்னார்களோ என்ற எண்ணம் தோன்றியது. தெரிந்த தமிழும், எழுத்தும் தான் காக்க வேண்டும், என்று நினைத்து எழுதினால், அது ஒரு வேளை யில்லை, ஒரு வாயின் உணவிற்கும் அது மிஞ்சாது. இருந்தும், மொழியின் மீது கொண்ட காதல் யாரை விட்டது, பிழைப்பதற்கு இல்லை என்றாலும், பொழப்புக்கு தேவை படுகிறது...


பற்றற்று வாழ வேண்டும் என்று நினைத்து, அதற்கும் ஒரு பற்று தேவை படுகிறதே...வள்ளுவன், நினைவுக்கு வந்தான்...


"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு"


யார்க்கு, எதன் மீது பற்று இல்லையோ, அவர்களை நீ பற்றி கொள் என்பதே...ஆனால், இறைவனும் நமக்கு விதிகளை திணித்து விட்டான், அந்த விதிக்குள் நம் மதியை கொண்டு விளையாட வைத்தான்.. எதுவென்றாலும் அது, விதியே.. வீரன் தோற்றால் அது விதி, அவன் ஜெயித்தால் அது மதி, இதை தான் உலகம் நம்புகிறது...


விதியோ, மதியோ எது வாயினும், வயிற்றுக்குள் மணி அடித்தால் என்ன செய்வது ? என்று ஆழந்த சிந்தனையில் இருக்கும் பொழுது, சுவற்றை நோக்கினால் மாதம் நாளை தொடங்குகிறது.., வங்கியில் இருக்கும் கணக்கே குழம்பி போய்விடும், இவன் போடும் கணக்கிற்கு... யாரிடம் ? கேட்கலாம்...இல்லை எழுதினால் பணம் கிடைக்குமா ? எனக்கு நான் எழுத்தாளன்.. ஊருக்கு வெறும் கடன்காரன்... என்ன செய்வது ? நாளை கதை நாளைக்கு...இன்று என்பது நிஜமே...


யோசிக்காமல் மீண்டும் எழுதினான், யார்க்கும் இல்லை..தனக்காக  …

ஏன் என்றால் அவன் எழுத்தாளன், அவனே இறைவன் அவனுக்கு..


எழுத்தும், கட்டுரையும்,

கல்யாணராமன் நாகராஜன்..


Add Your Comments

Say Something

 

Comments

No comments.