பிஞ்சு முகம் !!!

09 Feb 2020 Admin

பிஞ்சு முகம் வாட,
பால் வாங்க இருபது ருபாய் ;
பசியில் அழுகை வீட்டை மட்டுமில்லை - என்
உயிரையும் இரண்டாகியது..

உண்டில் உடைக்கப்பட்டது - ஏனோ,
மறந்து போனேன் அது சென்ற வார
கணக்கில் தீர்க்கப்பட்டது..

வீட்டின் அலமாரிகள் தடம் புரண்டது,
பல அறையகம் கலைக்கப்பட்டது,
அலைபேசியில் நண்பன் எண் தேடப்பட்டது,
இருந்தும் மணம் தடுத்தது - இருபது எப்படி கேட்பது ?
வாழ்ந்தவன் பணம் கேட்டால் - உதவி;
வாழ பணம் கேட்டால் - பிச்சை;
நான் என்ன ரகம் என்றறியாது - நின்றேன்...

நேரங்கள் நகர - அவள் குரலோடு,
பிஞ்சு அழுகையும் முட்டிக்கொண்டது..
சமாதானம் செய்யவும் - அறியாது
வார்த்தை தொற்றி கொண்டது - அப்பா
பால் வாங்க சென்றுவிட்டார்..

எவ்வழி என்று தெரியாது - எண்
வண்டி நகர்ந்தது - வேகம் தெரியவில்லை,
கடையில் கடன் சொல்ல - வார்த்தை வரவில்லை,
சற்றும் யோசிக்காமல் - நண்பன் வீட்டுக்கு பாதை மாறியது..

வண்டியின் வேகத்திற்கு தடையாய்,
போக்குவரத்து சமிக்ஞை - சற்றே நின்றேன்..
அருகில் ஏக வசனங்கள் - கோபத்தில் முகம்
மாற - ஒரு குரல்;
கை கால் நல்லாதானே இருக்குது,
ஏன் பிச்சை எடுக்கிறாய்;
யோசிக்காத பதில் - பால் வாங்க என்றால்;
கண்ணீரோடு கையில் பிஞ்சு குழந்தை அழுகை..
வெய்யிலின் சுளீர் - முகத்தில் அறைந்தால் போல்,
அந்த பதில் எனக்கும் சேர்த்தோ என்று தோன்றியது,

தனி மனிதனுக்கு - உணவில்லை என்றால் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி;
குழந்தை எந்த வகை என்று தெரியவில்லை...

அரோஹரா - என்று பெரும் சத்தம்,
கற்சிலைக்கு நம்பிக்கையில் - பால்
அபிஷேகம் - அதில் விழும் சிறுதுளி
பால் அள்ளிக்கொள்ள ஓராயிரம்
பிஞ்சு முகங்கள் - அதில் ஏனோ
என் முகமும் !!!