நீர் என்றுமே....

By Admin - 26 May 2025 164 0

தரை தொடும் முகில்
அழுவதில்லை,
போகும் திசையெல்லாம்
அமுதமாய் துளிர்கிறது...

மலையின் மடியிலே
தாய் போல பாயும் அருவி,
சிறு ஓடையின் ஓசையில்,
தாகம் தீர்க்கும் நதியில்,
அது பயணிக்கிறது —
வெறும் நீராக அல்ல,
உணர்வின் ஒலியாய்...

அனைத்தையும் கடந்தபின்,
சங்கமிக்கும் கடல் கூட
பேசிக்கொள்கிறது மேகத்துடன்:
“நீ வந்ததிலும், நான் வந்ததிலும்
தவிர்க்க முடியாத விதியே உள்ளது...”
நாம் தரும் நீர் என்றுமே அமுதம் தான்...

பசியோடு நின்றவனுக்கு,
சிறு மழைத் துளியும் — அமுதம்.
பக்தியோடு வைத்த நீரும்,
பரமனுக்கே பரிசமுதம்...

மனிதனுக்கு மட்டுமல்ல,
கண்ணில் கண்டு, காணாத
உயிருக்கும், அந்த வெய்யோனுக்கும்,
இயற்கைக்கும்,
நீர் தந்த உயிருக்கும், உடலுக்கும்,
நீர் இன்றி ஏது வேறு அமுதம்...

நாம்,
பிறக்கின்ற நீரும் அமுதம்,
கரைகின்ற நீரும் அமுதம்...

அன்போடு தரப்படும் எதுவும்,
அது நீராயினும் — அமுதம் தான்.
நீர் என்றுமே — அமுதம் தான்.

Add Your Comments

Say Something

 

Comments

No comments.